கை, கால்கள், முறையாக வளர்ச்சியடையாததால் பிளாஸ்திக் கூடையொன்றில் அமர்ந்தவாறு வசித்து வந்த 19 வயதான யுவதியொருவர் கடந்த ஞாயிறன்று உயிரிழந்துள்ளார்.
நைஜீரியாவின் கெனோ எனும் கிராமத்தை சேர்ந்த ரெஹ்மா ஹருனா எனும் இவர் பிறக்கும் போது ஆரோக்கியமானவர் போன்றே தென்பட்டார்.
ஆனால், 6 மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல் வளர்ச்சி திடீரென நின்றது. அரிதான நோய் ஒன்றின் காரணமாக ரெஹ்மாவின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அவரின் கைகள், கால்கள் இயங்கவில்லை. இதனால், பதின்மர் வயதான போதிலும் ரெஹ்மாவை பிளாஸ்திக் கூடையில் வைத்தே அவரின் பெற்றோர் பராமரித்தனர்.
ரெஹ்மாவுக்கு தம்மால் முடிந்தவரை அவர்கள் துணையாக இருந்தனர். பிளாஸ்திக் கூடையில் வைத்து கிராமம் எங்கும் அவரை அழைத்துச் சென்றனர்.
தனது உடல்நிலைக்கு மத்தியிலும் ரெஹ்மா மகிழ்ச்சியானவராக காணப்பட்டதுடன் 10 வயதான தனது இளைய சகோதரனுடன் அவர் நெருக்கமானவராக இருந்தார்.
தினமும் ரெஹ்மாவை தான் வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாக அவரின் சகோதரன் பஹாத் தெரிவித்துள்ளார்.
“எனது பெற்றோர் மிகவும் உதவுகின்றனர். எனக்குத் தேவையானவற்றையெல்லாம் அவர்கள் வழங்குகின்றனர் ” என இவ்வருட முற்பகுதியில் ரெஹ்மா ஹருனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ரெஹ்மா உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.