பெண்களை விட ஆண்களின் மூக்கு ஏன் பெரிதாக இருக்கின்றது என்று தெரியுமா?

543

பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவு பிராண வாயு தேவைப்படுவதால் ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவில் இதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு 10 சதவீதம் அளவில் பெரியது. ஆண்களின் உடல் அமைப்பில் சதை அதிகம் உள்ளது.

இதன் வளர்ச்சிப் பெருக்கத்திற்கு அதிக அளவு ஒட்சிஜன் தேவைப்படுகிறது. பெண்களின் உடலில், சதையை விட கொழுப்பு அதிகம் உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கு சதை குறைவு என்பதால், அவர்களுக்கு ஆண்களை விட குறைந்த அளவிலான பிராண வாயு போதுமானது.

அதிக அளவு ஒட்சிஜனை உள்ளிழுப்பதற்காகவே ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூக்கின் அளவுகளின் அடிப்படையின் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நமது முன்னோர்களுக்கு பெரிய அளவிலான மூக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினருக்கு சிறிதாக உள்ளது. நம் மூதாதையர்கள் பெரிய உடல் அமைப்பை பெற்றிருந்தனர்.

அவர்களின் உடல் வளர்ச்சிக்காக அவர்களுக்கு அதிக அளவு ஒட்சிஜனை உள்ளிழுக்கும் பெரிய மூக்கு தேவைப்பட்டது. ஆனால், நம் உடல் அளவு சிறிதாக இருப்பதால், தற்போது நம் மூக்கு சற்று சிறிதாகவே அமைந்துள்ளது.

பொதுவாக பிறக்கும் குழந்தைகளின் மூக்கின் அளவில் பெரிய மாறுபாடுகள் இருக்காது. ஆண் பெண் குழந்தைகளுக்கு ஒரே அளவிலான மூக்கே காணப்படும். 11 வயது ஆகும் போது மூக்கின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். 11 வயதைக் கடந்த சிறுவர், சிறுமியரிடம் மூக்கின் அளவில் உள்ள வேறுபாட்டை நம்மால் நன்கு காண முடியும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.