பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து நபர் ஒருவரை தான் வெளியே தள்ளி கொன்றதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டுவார்ட்டே கூறினார் என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருபவர் ஜனாதிபதி டுவார்ட்டே.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏராளமானனோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அமெரிக்கா முதலான நாடுகள் மற்றும் மற்றும் ஐ.நாவின் கண்டனங்களையும் ஜனாதிபதி ரொட்றிகோ டுவார்டே புறக்கணித்து வருகிறார்.
டாவோ நகர மேயராக தான் பதவி வகித்த காலத்தில், போதைப் பொருள் விற்பனையாளர்களைத் தேடி பொலிஸாருடன் இணைந்து முற்றுகையில் ஈடுபட்டதுடன் போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரை சுட்டுக்கொன்றதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி டுவார்ட்டே கூறியிருந்தார்.
இந்நிலையில், பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து நபர் ஒருவரை வெளியே தள்ளியதாகவும் ஜனாதிபதி டுவார்ட்டே செவ்வியொன்றில் கூறியதாக பிலிப்பைன்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
ஹெலிகொப்டர் ஒன்றில் தான் பயணம் செய்த போது அந்த ஹெலிகொப்டரை கடத்துவதற்கு முயன்ற நபர் ஒருவரையே இவ்வாறு தான் வெளியில் தள்ளியதாகவும் ஜனாதிபதி டுவார்ட்டே கூறியுள்ளார்.
தேவையானால் மீண்டும் அவ்வாறு செய்வதற்கும் தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீங்கள் ஊழல் பேர்வழியானால், உங்களை ஹெலிகொப்டரில் ஏற்றி, தலைநகர் மணிலாவுக்குச் செல்லும் வழயில் ஹெலிகொப்டரிலிருந்து வெளியில் தள்ளுவேன் என அவர் கூறியதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்தது.
ஆனால், இவ்வாரம் மீண்டும் அவரிடம் இது குறித்து வினவப்பட்ட போது, அக்கூற்றை நிராகரிக்கும் வகையில் அவர் பதிலளித்துள்ளார்.






