ஏறாவூர் – தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சிறுவன் ஒருவர் திடீரென விழுந்து மரணித்தமைக்கு சுவாசக் குழாயில் பலூன் அடைத்ததே காரணம் என தெரியவந்துள்ளது.உடற் கூற்றுப்பரிசோதனையில் சுவாசக் குழாயை பலூன் அடைத்ததாலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட தேவாலயத்தில் பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.திடீரென மயங்கி விழுந்த குறித்த சிறுவனை உடனடியாக நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்றுப்பரிசோதனை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீராம் ஜெயக்கொடி மேற்கொண்ட உடற் கூற்றுப் பரிசோதனையின் போது, சிறுவன் ஊதி வெடித்துச் சிதறிய பலூனின் இறப்பர் துண்டுகள் சிறுவனின் சுவாசக் குழாயை இறுக அடைத்துக் கொண்டதாலேயே சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மரணித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் என்ற சிறுவன் இவ்வாறு மரணித்திருந்தார்.இதேவேளை, விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.