சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாக சென்ற நாய்!!

305


சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கால்நடையாகவே சபரிமலைக்குப் புறப்பட்டார்.

சுமார் 80 கிலோ மீற்றர் கடந்திருந்தபோது, வீதியின் எதிர்ப்புறமாக நாய் ஒன்று நவீனைப் பின் தொடர்ந்தது. சற்று நேரத்தில் வீதியைக் கடந்து நவீனின் பின்னால் வரத் தொடங்கியது. அதை விரட்ட நவீன் எவ்வளவோ முயற்சித்தபோதும், எந்த விதத் தொந்தரவும் தராத அந்த நாய் அவரையே பின்தொடர்ந்து சென்றது. ஓரிரு நாட்களில் நவீனும் நாயும் நண்பர்களாகினர்.அந்த நாய்க்கு மாலு என்று பெயரிட்ட நவீன், அதற்கு கறுப்புப் பட்டியையும் முத்து மாலை ஒன்றையும் மாட்டிவிட்டார்.

நவீன் சபரிமலையை அடைய எடுத்துக்கொண்ட பதினெட்டு நாட்களும் அந்த நாய் அவரையே பின் தொடர்ந்தது. நவீனை விட்டு ஒரு சில மீற்றர் இடைவெளியில் அவரைத் தொடர்ந்த அந்த நாய், இரவில் நவீன் தூங்கும்போது அவரது பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது. இவ்வாறு சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடந்திருக்கிறது மாலு.

யாத்திரை முடிந்து வீடு திரும்பும்போது, விசேட அனுமதி பெற்று மாலுவை பேருந்தில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் நவீன். தற்போது, நவீனின் குடும்ப உறுப்பினர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள மாலு அவர் வீட்டிலேயே தங்கியிருக்கிறது.