வன்னியில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம்!!

250

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விவசாயக் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவிற்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு..

பருவ மழை பொய்த்ததன் காரணமாக வட மாகாணம் முழுவதும் குறிப்பாக வன்னி மாவட்டம் பெரும் வறட்சியை எதிர் நோக்கியுள்ளது. குடிநீர் முதல் பயிர்ச்செய்கை வரை அனைத்தும் கேள்விக்குள்ளாகியுள்ளது. விதைக்கப்பட்ட பல வயல் நிலங்கள் தண்ணீர் இன்றி அழிந்தும் அழிந்து கொண்டும் இருக்கிறன.

அடுத்த சில தினங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழல் உருவாகி வருகிறது. விரைந்து செயற்படவில்லையெனில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். இந்த சூழலை இயற்கைப் பேரிடராகக் கருதி விரைந்து செயற்பட்டு பயிர் நிலங்களை காப்பாற்றுவதற்கு விவசாயக் கிணறுகளும், அழிந்து போன வயல் நிலங்களுக்கு நஷ்டஈடும், வறட்சி நிவாரணமும். மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள், விதைகள், மாற்று பயிர் செய்கையை ஊக்குவித்தல், ஏனைய வசதிகள், நீர் இறைக்கும் இயந்திரம் உட்பட குடி நீர் பிரச்சனையை தீர்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.