வவுனியா சாந்தசோலையில் வசித்து வரும் பெண் அரச ஊழியர் ஒருவருக்கு இன்று பதிவுத்தபாலில் வந்த சாரதி அனுமதிப்பத்திரம் கவர் திறந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் அரச ஊழியர் ஒருவருக்கு போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் திறந்த நிலையில் அரச ஊழியரின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் உறவினரிடம் தபால் ஊழியரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அரச ஊழியர் இன்று அலுவலகத்திற்குச் சென்ற காரணத்தினால் தபாலை ஊழியர் அருகிலுள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.
தபால் ஊழியரிடத்தில் திறந்த நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளது என்று வினவிய போது முகவரி தெரியவில்லை, பல இடங்களில் விசாரித்த போதும் முகவரியை தெரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள புகைப்படத்தினைப் பார்த்து குறித்த நபரை இனங்கண்டு கொண்டுள்ளதாக தபால் ஊழியர் பதில் அளித்துள்ளதாக சாரதி அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொண்ட உறவினர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு பல தபால்கள் முதலில் அனுப்பி வைக்கப்பட்டு அவை கிடைத்துள்ளதாக பெண் அரச ஊழியர் தெரிவித்துள்ளார்.
மேலும், முகவரி தெரியாவிட்டால் பதிவுத்தபாலினை திருப்பி அனுப்பிவைக்கவும் என்று தபாலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








