கொழும்பு நகரில் பதிவு செய்யாது சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுக்கு உட்படாது கொழும்பு நகரில் சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய இந்த ஆண்டு அனுமதியளிக்கப்படாது. பதிவு செய்யாது சோற்றுப் பொதி விற்பனை முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் எவரும் சோற்றுப் பொதி விற்பனை செய்ய அனுமதி கோரவில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் சுமார் 300 சோற்றுப் பொதி விற்பனையாளர்கள் இருக்கின்றார்கள் எனவும் 2016ம் ஆண்டில் பதிவு செய்து கொண்டவர்கள், இந்த ஆண்டிலும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்.
அனைத்து சோற்றுப் பொதிகளிலும் உற்பத்தியாளரின் பெயர், விலாசம், உற்பத்தி நேரம், திகதி மற்றும் பதிவிலக்கம் போன்ற விபரங்கள் உள்ளடக்கிய முத்திரையொன்று பொறிக்கப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நியதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.






