உடையப்போகும் இராட்சச பனிப்பாறை : உலகுக்கு அச்சுறுத்தல்?

211

அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும். இதில் கடந்த ஓரிரு தசாப்தங்களாகவே வெடிப்பு தோன்றியிருந்தது என்றபோதிலும் இந்த வெடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் சடுதியாக நீளத் தொடங்கியது.

தற்போது விரிசல் விழுந்து தொங்கும் நிலையில் உள்ள 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைத் துண்டு இன்னும் 20 கிலோ மீற்றர்கள் நீண்டால் இரண்டாகப் பிளந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மொத்த பனிப்பாறையின் கால் பகுதியளவே பிளந்து செல்லவிருக்கிறது என்றாலும், இதனால் எதிர்காலத்தில் எஞ்சியுள்ள பகுதியும் பகுதி பகுதியாகப் பிரிந்து விடலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தப் பிளவு இயற்கையானதே தவிர, உலக வெப்பமயமாதலால் உண்டானதல்ல என்று கூறும் விஞ்ஞானிகள், லார்சன் சி பனிப்பாறை முழுவதுமாகச் சிதைந்து கடலில் கரையும் பட்சத்தில், உலக கடற்பரப்பின் உயரம் சுமார் 10 சென்றிமீற்றர் அளவு உயரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.