வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் !

879


08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம்

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். 

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம். மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்’ என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்: வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம். எனவே ஏகாதசி விரதத்தில் முதலீடுசெய்வோம். மார்கழி தேய்பிறை ஏகாதசி “உற்பத்தி ஏகாதசி”” எனப்படும். பகையை வெல்ல உதவும். தை மாத வளர்பிறை ஏகாதசி “புத்ரா”” எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும். தை தேய்பிறை ஏகாதசி “ஸபலா”” எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும். மாசி மாத வளர்பிறை ஏகாதசி “ஜயா”” எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும். மாசி மாத தேய்பிறை ஏகாதசி “ஷட்திலா”” எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும். மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் “ஷட்திலா”” என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது. பங்குனி தேய்பிறை ஏகாதசி “விஜயா”” எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.


 

பங்குனி வளர்பிறை ஏகாதசி “ஆமலகீ”” எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும். சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி “காமதா”” எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும். சித்திரை தேய்பிறை ஏகாதசி “பாபமோசனிகா”” எனப்படும் பாபத்தை போக்கும்.


நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர். வைகாசி வளர்பிறை ஏகாதசி “மோஹினீ”” எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும். வைகாசி தேய்பிறை ஏகாதசி “வரூதினீ”” எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

 

ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு “நிர்ஜனா”” என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி “அபரா”” எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை ஏகாதசி “தயினி”” எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “யோகினி”” என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும். ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு “புத்ரதா”” என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள். ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “காமிகா”” எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது. புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் “பத்மநாபா”” எனப்படும்.
இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது. புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா”” என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது). ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு “பாபாங்குசா”” எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு “இந்திரா”” எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது. கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு “ப்ரமோதினீ”” என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு “ரமா”” என்பர்.
இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது. வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி “கமலா”” எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும். ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும் (வைகுண்ட ஏகாதசியில்) “மோட்ச ஏகாதசியில்”” உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும். எனவே அனைவரும் இந்தப்புண்ணிய விரதத்தினைக் கடைப்பிடித்து வாழ்வில் நல்ல நிலையினை அடைவோமாக. “சர்வர்த்தன நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா”