வெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி?

476


உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை இது என்பதால் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் மாணவர்களை விட அனுமதி கிடைக்காத மாணவர்கள் தொகையே அதிகமாகும்.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களை எப்படி நகர்த்துவது? அல்லது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனும் கேள்வியும் எழுகின்றதல்லவா? பிரதானமாக கீழ்வரும் ஐந்து விடயங்களில் ஈடுபட அவர்கள் உந்தப்படலாம்..1. இன்னுமொரு தடவை முயற்சித்தல்.
2. வெளிவாரியாகப் பதிவு செய்தல்.
3. டிப்ளோமா கற்கைகளை தொடருதல்.
4. தொழில் தேடித் திரிதல்.
5. சுய தொழில் செய்ய முயற்சித்தல்.இவற்றில் தமக்கு எது பொருத்தமோ அவற்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பர். ஆனால் எது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை கற்றவர்கள் மற்றும் துறைசார் விடயம் தெரிந்தவர்கள் மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்க வேண்டும்.


கவலைக்குரிய விடயம் என்னவெனில் எம்சார் மக்களிடையே ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. A/ L படித்தால் கம்பஸ் போக வேண்டும். இல்லையேல் அத்துடன் படிப்பை விட்டு வேலைக்கு போக வேண்டும். இந்த அடிப்படைவாத மனநிலை மாணவர்களிடம் மட்டுமல்ல பெற்றோரிடமும் இருந்தால் அவை மாற வேண்டும்.

இன்னுமொரு தடவை முயற்சித்தல்..


முதல் தடவைப் பெறுபேறுகளில் கணிசமான முன்னேற்றத்தை கண்டவர்களும்.. இன்னுமொரு தடவை அதிக புள்ளிகளைப் பெறுவேன் எனும் தன்னம்பிக்கை உடையவர்களும்.. மறு தடவை முயற்சித்தல் நன்று.

பாடசாலைக்காலத்தோடு உடனடியாகவே அடுத்த தடவை முயற்சிக்கும் போது அவர்களுக்கான ஞாபக சக்தி அதிகமானதாக இருக்கலாம். குறிப்பேடுகள், மாதிரி வினாத்தாள்கள் கைவசம் இருக்கலாம். ஆகவே இவர்களுக்கு அடுத்த தடவை முயற்சித்தல் என்பது இலகுவானதாகவும் இருக்கலாம்.

ஆனால் வீட்டாரின் அல்லது விருப்பமுடையோரின் அழுத்தத்தினால் வேண்டா வெறுப்புடன் அடுத்த தடவை முயற்சிப்பது என்பது காலத்தை வீணடிக்கும் செயலாக அமைந்து விடும் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.

வெளிவாரியாக பதிவு செய்தல்..


உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள், அதே அரச பல்கலைக்கழகங்களில் வெளிவாரியாக பதிவு செய்ய முடியும்.

உண்மையில் பல்கலைக்கழக அனுமதி பெற்று உள்வாரியாக பரீட்சை எழுதும் மாணவர்கள் பெறுகின்ற பட்டத்திற்கு நிகரானதாகவே.. வெளிவாரியாக பரீட்சை எழுதும் மாணவர்களும் பெறுகிறார்கள். கற்கைக்கான கால எல்லைகளும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேதான் இருக்கின்றன.

உள்வாரி மாணவர்களுக்கு பல்வேறுபட்ட கட்டுப்பாடுகள் இருந்தாலும்.. அவ்விதமாக அதிகளவான கட்டுப்பாடுகள் வெளிவாரி மாணவர்களுக்கு இருப்பதில்லை.

தமக்கென ஒரு வேலைவாய்ப்பைப் பெற்று, அதனூடாக கிடைக்கும் வருமானத்தோடு, வீட்டோடு இருந்தபடி இப் பட்டப்படிப்பை தொடரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

அரச வேலைவாய்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் என்றாலும் சரி நேர்முகத் தேர்வுகள் என்றாலும் சரி பட்டம் தான் பார்க்கப்படுகிறதே தவிர, உள்வாரியா? வெளிவாரியா? என்பது கவனிக்கப்படுதல் அரிது. இதனை உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடையாத மாணவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஒப்பற்ற இலவசக்கல்வியைப் பெறுகிறோம். காசுக்காக அரச கல்வித்துறைசார் பல்கலைக்கழக பட்டங்களை விற்காத நாட்டில் வாழ்கிறோம். பல வழிகளிலும் பட்டக்கல்வியை பூர்த்தி செய்யக்கூடிய வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. பட்டதாரியானால் உரிமையுடன் வேலை வாய்ப்பைக் கோரி மனுக்களை சமர்ப்பிக்கவும் ஆர்ப்பாட்டம் செய்யவும் துணிகிறோம். இப்பேற்பட்ட பெறுமதியானதாகக் கருதப்படும் வெளிவாரியை மாணவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய பொறுப்பும் படித்தோருக்கு உண்டல்லவா.?

இவ்வளவும் இருந்தும்.. உயர்தரம் சித்தி அடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்காது விட்டவுடன் மனமுடைந்து போகிறார்கள். இருப்பினும் அதனை ஒரு சவாலாக நினைத்து பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வெளிவாரிப் பட்டங்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் குறைவென்பது மனவருத்தமே..

டிப்ளோமா கற்கைகளைத் தொடருதல்..

க.பொ.த. உயர்தரச் சித்தியுடன்.. பல அமைச்சுக்களினூடாகவும் டிப்ளோமா கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். அவை பெரும்பாலும் தொழில் வாய்ப்புக்கான துறைசார் பாடநெறிகளைக் கொண்டிருக்கும்.

பல்கலைக்கழக பட்டக்கல்விக்கான காலப்பகுதிகளை விட இவை குறைவானவையாகவே பெரும்பாலும் இருக்கும். அந்தந்த அமைச்சுக்கான டிப்ளோமாதாரிகளுக்கு அவ் அமைச்சுக்களினூடாக கோரப்படுகின்ற வேலைவாய்ப்புக்களை பெறுவதும் இலகுவானதாகும்.

உயர்தரத்தில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு பொருத்தமாகவும்.. வேலை வாய்ப்பை இலகுவாகப் பெறக்கூடியதாகவும் இருக்கின்ற டிப்ளமோ பாட நெறிகளை இம் மாணவர்கள் தொடருவதே அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

அத்துடன்.. அரச தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில் வழிகாட்டல் நிறுவனங்களும் இயங்குகின்றன. இவர்கள் மூலமாகப் பெறப்படும் சான்றிதழ்கள் பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதோடு அவர்களே வேலைத் தளங்களையும் இனங்காட்டித் தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் குறுகிய கால கற்கை நெறிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பயிற்சி நெறிகள் என்பனவையும் மாணவர் நலன் கருதி செயற்படுகின்றன. இவற்றை மாணவர்கள் கண்டறிய தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டல் வேண்டும்.

தொழில் தேடித் திரிதல்..

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய மறு தினமே.. தொழில் வாய்ப்புக்களை தேடித் திரிவதற்கென ஒருபகுதி மாணவர்கள் தயாராகி விடுவார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள்.. கற்றல்ச் சூழலில் ஈடுபாடு அற்றவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட தொழிலை மட்டும் தேடுபவர்களாக இருக்க மாட்டார்கள். எதுவானாலும் செய்யத் தயார் எனும் மனநிலையுடன் காணப்படுவார்கள்.

இவர்களுக்கும் பெரியவர்களினால் சரியானதொரு வழிகாட்டல் தேவைப்படும். தொழில் என்பது மனதிற்கு பிடித்ததாகவும் உடல் தகுதிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தல் வேண்டும். எதிர்காலத்தில் நின்று நிலைக்கக்கூடியதான தொழிலை சரியாக இனங்காட்டிக் கொடுத்தல் வேண்டும்.

அவர்களது குடும்ப நிலைக்கேற்ற தொழில் நிறுவனங்களோடும்.. முதலாளிமார்களோடும் இவர்களை தொடர்பு படுத்தி விடுவதே பொருத்தமானதாக இருக்கும்.

சுய தொழில் செய்ய முயற்சித்தல்..

இவர்கள் பெரும்பாலும் உயர்தரப் பரீட்சை எழுதியவுடன் தொழில் சார்ந்து சிந்திப்போராக இருப்பர். பெற்றோர் வழிவரும் தொழிலாகவும்.. நண்பர்கள் ஊடாக தாம் விரும்புகின்ற தொழிலாகவுமே இவர்கள் தெரிவு செய்யக்கூடிய சாத்தியப்பாடு இருக்கிறது.

இம்மாணவர்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். வசதி படைத்தவர்களாகவும் இருப்பர். அல்லது கடன்பட்டாவது தொழிலில் முன்னேறும் மனவுறுதி கொண்டவர்களாக இருப்பர்.

எது எப்படி இருப்பினும் இவர்களை பெற்றவர்களும் மற்றவர்களும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. காரணம் கட்டுப்பாடுகள் நிறைந்த பாடசாலைச் சூழலிலிருந்து தற்போது பரந்துபட்ட சமூகச்சூழலோடு இணைக்கப்படுகிறார்கள். பெருந்தொகை பணத்தைக் கையாள்வார்கள். எனவே இவர்களுக்கும் பொருத்தமுடையோரின் ஆலோசனைகள் தேவைப்படலாம்.

ஆகவே.. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களுடன் சேர்ந்து நாமும் சந்தோசப்படுவதுடன்.. அனுமதி கிடைக்காத மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்பாகவும் சிந்தித்தல் அவசியமாகிறது.

இவர்கள் ஒருவித தோல்வி மனப்பாங்கில் வேதனைக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். சிந்தனைச் சிதறல் கொண்டவர்களாக இருப்பார்கள். தடுமாற்றக்குணத்துடன் முடிவுகளை எடுக்கச் சிரமப்படுவார்கள். ஆகவேதான் இவர்களுக்குப் பொருத்தமான ஆலோசனைகள் இந்த நேரத்தில் தேவையென்பது வலியுறுத்தப்படுகிறது.

-முல்லைத்தீபன்-