அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும் பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குனர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த 12ம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை அஞ்சலிக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன், சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நடிகை அஞ்சலி சினிமா சூட்டிங்கில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராஜலட்சுமி நடிகை அஞ்சலி மீதான வாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகை அஞ்சலி மீதான வழக்கு விசாரணை வருகிற 3ம் திகதி வருகிறது.