அனில் அம்பானியின் ஐடி கணக்கை முடக்கிய 21 வயது சிஏ மாணவி மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவராக இருப்பவர் அனில் அம்பானி. இவரது வருமான வரி கணக்கை மும்பையில் உள்ள கணக்கு தணிக்கை நிறுவனம் ஒன்று பராமரித்து வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 26ம் திகதி வருமான வரி கணக்கு அலுவலகத்தில் இருந்து இமெயில் தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அனில் அம்பானியின் இணையதள கணக்குக்கான பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக ஜூலை 12ம் திகதி மீண்டும் இதேபோன்ற தகவல் இமெயில் வந்தது. இதனால் சுதாரித்த கணக்கு தணிக்கை நிறுவனம் உடனடியாக அனில் அம்பானியின் கணக்கை ஆராய முயன்றபோது அது முடக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் பொலிசில் புகார் செய்தது. விசாரணையில் ஐதராபாத்தைச் சேர்ந்த மனோஜ் டகா அண்ட் கம்பெனி என்ற கணக்கு தணிக்கை அலுவலகத்தில் சிஏ முடித்து பயிற்சி பெற்று வந்த 21 வயது மாணவிதான் அனில் அம்பானியின் கணக்கை முடக்கி அதில் இருந்த விவரங்களை பார்த்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனில் அம்பானி எவ்வளவு வரி செலுத்தியுள்ளார், அவரது பான் கார்டு எண் என்ன என்பதை பார்ப்பதற்காக கணக்கை முடக்கியது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் குற்றத்தின்கீழ், கடந்த 7ம் திகதி சம்பந்தப்பட்ட மாணவி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.