உலக அழகிப் போட்டிக்கு போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி!!

576

world

உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக ஜகார்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று ஜகார்தாவில் நடைபெறவுள்ளதாம். உலக அழகிப் போட்டிக்கு எதிராகவும் அதைக் கண்டித்தும் இந்த முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டி ஜகார்தாவில் புதன்கிழமையன்று நடைபெறவுள்ளதாம்.

இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து இதை நடத்தவுள்ளன. இந்தப் போட்டிக்கு முஸ்லிமா வேல்ட் போட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து போட்டி நிறுவனரான ஈகா சாந்தி கூறுகையில் மிஸ் உலக அழகி போட்டிக்கு முஸ்லிம் உலகம் தரும் பதிலடி இது என்றார்.
இதுவும் அழகிப் போட்டிதான். ஆனால் உலக அழகிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது தன்னம்பிக்கை தரும் போட்டியாகும். ரோல் மொடலாக திகழ்வதற்கான போட்டியாகும்.

இன்றைய நவீன உலகில் மதக் கோட்பாடுகளை எப்படிக் கடைப்படிப்பது, சமச்சீரை எப்படி கடைப்பிடிப்பது என்பதைச் சொல்லித் தரும் போட்டியாகும் இது என்றார் அவர்.

முஸ்லீமா வேல்ட் அழகிப் போட்டிக்கான அழகிகள் தேர்வு இணையத்தின் மூலம் நடந்தது. 500 பேர் கலந்து கொண்டதில் 20 பேர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

குரான் வாசகங்களைப் படிப்பது இஸ்லாமியக் கதைகள் ஒப்புவித்தல், இஸ்லாமிய மத உடைகளை அணிவதில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் உள்ளிட்டவை குறித்து இந்த அழகிப் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டு இறுதிச் சுற்றுக்குப் பெண்கள் தேர்வாகியுள்ளனராம்.

இறுதிச் சுற்றில் இடம்பெற்றுள்ள பெண்கள் இந்தோனசியா, நைஜீரியா, பங்களாதேஷ், புரூணே, மலேசியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். இறுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தப் பெண்கள் இஸ்லாமிய மத உடையில் கேட் வாக்கும் செல்லவுள்ளனராம்.