ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது!!

735

nuclear-power-plant

ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2011ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் தாக்கத்துக்கு உள்ளான புகுஷிமா அணுமின் உலைகள் இன்னமும் பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1986ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.

இன்று மாலை மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு நாளைக் காலை முதல் இந்த மின்உலையும் செயலற்ற நிலையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை.

40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும் ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின் பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின.

தற்போதும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும் பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது. புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.

புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும் நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.

இந்த முடிவானது, உலகின் மூன்றாவது பொருளாதார சக்தி படைத்த ஜப்பானை இரண்டாவது முறையாக அணுசக்தியின் செயல்பாடு இல்லாத நிலையில் வைக்கின்றது.