ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு!!

259

sresanth

வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் சண்டிலா உள்ளிட்டோர் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் தற்போது ஜாமினில் உள்ளனர்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதால் ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை கடந்த ஜூலை 30ம் திகதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் விசாரணை தொடங்கவில்லை.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ரவி சவானி விசாரணை அறிக்கையின் படி ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அமித் சிங்(5 ஆண்டு), சித்தார்த் திரிவேதியும்(1 ஆண்டு) தண்டனை பெற்றனர்.

பிசிசிஐயின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீசாந்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில் பிரிமியர் தொடர் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.

இதன் விசாரணை நடந்து இறுதி தீர்ப்பு வரும் வரை பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு காத்திருக்க வேண்டும் தடை குறித்து எவ்வித முடிவும் எடுத்திருக்கக் கூடாது.

ஏனெனில் ரவி சவானியின் அறிக்கை பெரும்பாலும் டெல்லி பொலிசாரின் விசாரணையை சார்ந்து தான் உள்ளது. இவையெல்லாம் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தடை விதித்தது செல்லாது. இதனால் ஸ்ரீசாந்த் நீதிமன்றத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.