வவுனியா, புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக்கழகத்தால் மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர் கெளரவிப்பு!!

1060

 
தைத்திருநாளை முன்னிட்டு வவுனியா, புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக்கழகம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தமது மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்தது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பா.பார்த்தீபன் தலைமையில் நேற்று (14.01) இந் நிகழ்வு மைதான அரங்கத்தில் இடம்பெற்றது.

வவுனியா, புதுக்குளம் பாடசாலையில் கல்வி பெற்று தற்போது வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் கணித துறையில் மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதல்நிலையையும், கலைத்துறையில் மாவட்டத்தில் எட்டாம் நிலையையும் பெற்ற மாணவர்கள் மற்றும் இப்பகுதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் 12 பேர் உட்பட 15 மாணவர்களுக்கு கௌரவிப்பும், அவர்களுக்கான சிறு உதவுத் தொகையும் வழங்கப்பட்டது.

மாணவர்கள் புதுக்குளம் சிவன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சித்திவிநாயகர் விளையாட்டு மைதான அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இது தவிர, தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிநேக பூர்வ கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான தா.அமிர்தலிங்கம், புதுக்குளம் மாகவித்தியாலய அதிபர் ச.சுபாஸ்கரன், புதுக்குளம் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி க.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.