மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார் இஸ்மாயில் (48) என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
நேற்று காலை குறித்த நபர் கடமை புரியும் ஓட்டமாவடியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கடமைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு மூத்த மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று முற்பகல் 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது கணவர் வீட்டு வளையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் மாணவி உட்பட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் யோகநாதன் ரசிகலா (16) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.