சம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடர் மிகச் சவாலானது : பிரண்டன் மெக்கலம்!!

286

Brendon McCullum

சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிச் சுற்று சவால் நிறைந்ததாக இருக்கும். கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என ஒடாகோ வோல்ட்ஸ் அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்தார்.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் 20-2o சுற்றுத்தொடர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த, 10 உள்ளூர் சம்பியன்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், அவுஸ்திரேலியாவின் பெர்த், பிரிஸ்பேன், தென் ஆப்ரிக்காவின் டைட்டன்ஸ், லயன்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண் டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்தின் ஒடாகோ வோல்ட்ஸ், இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ், பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ், 6வது பிரிமியர் கிரிக்கெட்டில் 4வது இடம் பிடித்த ஐதராபாத் உள்ளிட்ட 4 அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்று குறித்து ஒடாகோ வோல்ட்ஸ் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கலம் கூறியது:

சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிச் சுற்றை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் இருப்பதால், எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் விளையாடினால் மட்டுமே, பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியும். எனவே, தொடரை வெற்றியுடன் துவக்குவது அவசியம்.

சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் மூன்று ஆசிய அணிகளுடன் விளையாட இருப்பது சவாலான விடயம். கடந்த 2009ல் நடந்த தகுதிச் சுற்றில் முதலிரண்டு போட்டியில் தோல்வி அடைந்த ஒடாகோ வோல்ட்ஸ் அணி பிரதான சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

இம்முறை சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்டுள்ளோம். தவிர அணியில் திறமையான இளம் வீரர்களுடன் சில அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதென பிரண்டன் மெக்கலம் கூறினார்.