கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.
பூநகரி பிரதேசத்தில் பனையோலை வெட்டச் சென்ற பெண்ணொருவர் இராணுவ பதுங்குகுழி ஒன்றில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பூநகரி பகுதியை சேர்ந்த திருமணமான 43 வயதான பெண் அண்மையில் ஒருநாள் பனையோலை வெட்டச் சென்ற போது இராணுவ அணியும் சீருடைக்கு ஒத்த சீருடையணித்த சிலர் அந்த பெண்ணின் கண்களை கட்டி விட்டு பதுங்குகுழி ஒன்றுக்கு கொண்டு சென்று பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.