பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்தானின் மிக பலசாலி மனிதர் என வர்ணிக்கப்படுகிறார். 25 வயதேயான ஹையாத்தின் தற்போதைய எடை 435 கிலோகிராம். பாகிஸ்தானின் மர்தான் நகரைச் சேர்ந்தவர் இவர்.
வெறுமனே உடற் பருமனில் மாத்திரம் வித்தியாசமானவராக அர்பாப் கிசெர் ஹையாத் இருக்கவில்லை. பளுதூக்கும் போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் நகரும் உழவு இயந்திரம் (ட்ரெக்டர் ) ஒன்றை கயிறு கட்டி தனது கரங்களால் இழுத்து நிறுத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பிரமாண்ட உடல் தோற்றம் கொண்ட ‘ஹல்க்’ எனும் கொமிக்ஸ் பாத்திரம் உலகப் பிரசித்தி பெற்றது. அது ஒரு கற்பனைப் பாத்திரம். இந்நிலையில், உலகில் உயிர்வாழும் நிஜமான ஹல்க் என அர்பாப் கிசெர் ஹையாத் புகழப்படுகிறார்.
‘பளு தூக்குதலில் சம்பியனாக வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த உடலைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடலால் எனக்கு எந்தவொரு உடல் நலக்கோளாறோ அல்லது, உடல் எடையினால் அசௌகரியமோ ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
6 அடி 3 அங்குல உயரமான அர்பாப் கிசெர் ஹையாத் 2012 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் 5000 கிலோகிராம் எடையைத் தூக்கியதாகக் கூறுகிறார்.
தனது பிரமாண்ட உடல் தோற்றத்துக்காக விசேட உணவு முறையை அவர் கடைப்பிடிக்கிறார்.
தினமும் 10,000 கிலோ உணவு அவருக்குத் தேவைப்படுகிறதாம். இதற்காக 36 முட்டைகள், 3 கிலோ இறைச்சி, மற்றும் 5 லீற்றர் பால் ஆகியவற்றை அவர் உட்கொள்கிறார்.
கலோரி அதிகமான உணவுகளையே அவர் உட்கொள்கிறார். உலகின் மிகப் பலசாலி மனிதராக வேண்டும் என விரும்பும் அர்பாப் கிசெர் ஹையாத், அமெரிக்காவின் டபிள்யூ. டபிள்யூ.ஈ. (WWE) மல்யுத்தப் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.