ஆண் மற்றும் பெண், ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் அதிகப்படியான உடல் பருமன்.ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை வைத்து இல்லாமல் அதற்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், அதை உடல் பருமன் என்று கூறுவார்கள்.ஆனால் இப்படி அதிக உடல் எடை வைத்திருந்தால், நமக்கு பலவித நோய்களின் தாக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்
நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் போன்ற உணவு வகைகள் மற்றும் குறைந்த உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்சினை, ஜீன் மற்றும் ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களினால் தான் நமக்கு அதிக உடல் பருமன் ஏற்படுகிறது.
நமது உடம்பில் இருக்கும் பாங்கிரியாஸ் என்ற இன்சுலின் கணையத்தில் இருந்து சுரக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உடலில் உள்ள திசுக்கள் இன்சுலினை பயன்படுத்தாமல், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலினை அதிகரிக்கச் செய்வதால் நமது உடம்பில் கொழுப்புகள் அதிகமாகி ஊளைச் சதையை ஏற்படுத்துகிறது.நமக்கு ஏற்படும் அதிகப்படியான உடல் எடையானது, நம்முடைய வயது, மரபணு, மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவையும், சில குடும்ப வம்சங்களின் மரபணுக்கள் காரணமாக அதிக உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் பருமன் பிரச்சனையால் ஏற்படும் நோய்கள்
நமக்கு அதிகப்படியான உடல் எடை அதிகரித்து விட்டால், ரத்த அழுத்தம், இதயம் படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்த குறைபாடு, நீரிழிவு, மூட்டு வலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை உடல் பருமனால் ஏற்படும்.
இதுவே பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை, மார்பக புற்றுநோய், இடுப்பு, கை, கால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எடையைக் குறைக்கும் கை மருந்துகள்
முருங்கை இலைச் சாற்றை தினமும் இரண்டு வேளைகள் 2 டீஸ்பூன் அளவு குடிக்கலாம். மேலும் துளசி இலைச் சாற்றைச் சூடாக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.
தினமும் நமது உணவில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இலந்தை மரத்தின் இலையைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.
சிறிதளவு கொள்ளைச் சுத்தம் செய்து தினமும் அதை ரசம் வைத்து, அதனுடன் கல் உப்பை சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 3 வேளைகள் குடித்து வர வேண்டும்.
ஓமத்தை நன்கு வறுத்துப் பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும். மேலும் அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கித் தேனில் குழைத்துத் தினமும் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை பொடியைத் தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும். மேலும் சிறிதளவு மோர், கேரட் ஆகியவற்றை அரைத்துத் தினமும் குடித்து வரலாம்.
வாழைத் தண்டுசாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில், ஏதாவது ஒன்றைக் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.