இளைஞர்கள் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் 115 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நேற்று காலை 10 மணிக்கு யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நாட்டப்பட்டது.
இளைஞர்கள் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் மொஹான்லால் க்றேரோ ஆகியோர் மேற்படிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தனர்.
இவ்வாண்டிற்காக நிதி அமைச்சரூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து இலங்கை முழுவதும் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் 7 பல்கலைக்கழக கல்லூரிகள் அமைப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இக்கல்லூரிகளில் புதிதாக 30 படநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு மொத்தமாக 40 டிப்ளோமா பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கல்லூரிகளில் கல்வி பயில 300 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இக்கல்லூரிகளின் சிறப்பு தேர்ச்சி பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் கொழும்பு ரத்மலானையில் அமைந்துள்ள வாழ்க்கைத் தொழில், தொழில் நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் தகைமை 7 தரத்திலான பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
க.போ.த உயர்தரப் பரிட்சையில் சித்திபெற்றாலும், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் இப் பல்கலைகழகக கல்லூரி மூலம் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.