மெய்சிலிர்க்க வைக்கிறது மெரீனா : உலகிற்கு பாடம் சொல்லிக்கொடும் இளைஞர்கள்!!

444

தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.

இந்திய அரசியலைப் பொறுத்த வரையிலும், எதிர்ப்பு போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்று எதை எடுத்தாலும் அது தமிழர்களிடத்தில் இருந்து, தமிழகத்தில் இருந்து தான் மற்றைய மாநிலங்களுக்கும் பரவும்.

கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த மொழிப்போர், இன்றளவும் பேசப்படும் அரசியல் மற்றும் உரிமை மீட்புப் போராக வரலாறாகி நிற்கிறது.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பை கண்டித்து 1980ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தன்னெழுச்சியாக அன்றைய மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்திருந்தனர். அதேபோன்று, 2009ம் ஆண்டு ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பிற்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஈழ உணர்வாளர்கள் என்ற அத்தனை பேரும் களத்தில் இருங்கியிருந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் தாங்கள், பாதிக்கப்படுவதை உணர்ந்து ஜல்லிக்கட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தடைச்சட்டத்தை உடைப்பதற்கான அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அறப்போராட்டம், அமைதிப்போராட்டம், மௌனப்போராட்டம், மாணவர் எழுச்சி, உரிமை மீட்புப் போர் என்று பல்வேறு விதத்திலும் அழைக்கப்படுகிறது மாணவர்கள் எழுச்சியை.

இது தமிழகம் எங்கும் மிகமிக அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

யாருமே இங்கே தலைவர்கள் இல்லை. யாரும் சொல்லிக்கொடுத்து போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களாகவே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூரில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று மெரீனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் படைகளோடு வீரஎழுச்சியாகி நிற்கிறது.

ஆட்சியாளர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது. இந்நிலையில் தான் இன்று அனைவராலும் இந்தப் போராட்டத்தை வியந்து பார்க்க வைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.

குறிப்பாக இதுவரை காலமும் தமிழகம், இந்தியா உட்பட பல இடங்களில் நிகழ்ந்த போராட்டங்கள் வன்முறைகள், கலவரங்களில் தான் போய் முடியும். ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் இன்றி தொடர்கின்றது.

இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வாகனங்களை சாதாரணமாக நெருக்கடி இன்றி செலுத்திச் செல்ல முடிகின்றது.

போக்குவரத்து காவல்த்துறையினருக்கு உதவியாக நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.

பொதுவாக, இளைஞர்களை காவல்த்துறையினர் போக்குவரத்தின் போது மிரட்டுவர். ஆனால் இன்று இளைஞர்கள் போக்குவரத்தை சீர் செய்ய அவர்களுக்கு துணையாக நிற்கிறார்கள் காவல்த்துறையினர்.

பெண்கள் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை எந்தத் தொந்தரவும் வந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.

தமிழ் இளைஞர்களிடத்தில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லியில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்குமே தமிழர்கள் தலைமை தாங்கக் கூடிய வல்லமையும் திறமையும் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் இந்தியா முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

மெரீனா கடற்கரையில் மனிதத் தலைகளால் நிரம்பிக்கிடக்கிறது. இதை இந்திய மத்திய அரசாங்கம் வியந்து பார்த்துக் கொண்டே தன்னுடைய நகர்வை நகர்த்த வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஏனெனில் மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில், தமிழகத்தின் நிலை குறித்து மிக நேர்த்தியான மற்றும் ஆபத்தான நிலை குறித்து விபரிக்கப்பட்டிருந்ததால் தான் மோடி அரசாங்கம் பணிந்தது என்கிறார்கள்.

குறிப்பாக வன்முறையற்ற எதிர்ப்புக்களைத் தமிழ் மக்கள் காட்டிக்கொண்டிருப்பது அவர்களுக்கு தலைவலியாக மாறியிருந்தது.

கலவரங்களாக போராட்டம் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் இலகுவில் அடக்கியிருக்கும். ஆனால், இப்போராட்டம் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டிருந்ததே அரசாங்கத்திற்கு சிக்கலை உருவாக்கியிருந்தது.

அதற்கு காரணம் ஒவ்வொரு தமிழனும் தான். தங்கள் எதிர்ப்பை அமைதியான வழியில் பதிவு செய்துகொண்டிருந்தனர்.

போராட்டத்திற்கு வந்தவர்களின் தாகத்தை, பசியை தீர்க்க தன்னார்வ தொண்டர்கள், உதவியாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் உதவிக்கரம் போராட்டத்தை வலுப்பெறச் செய்திருக்கிறது.

இளைஞர்கள் பெண்களை பாதுகாக்கிறார்கள். அச்சமின்றி பெண்களும் இரவில் தங்கியிருந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் தமிழன், இது தான் தமிழர் நாடு என்பதைக் காட்டி நிற்கிறது மெரீனாக் கடற்கரை.

போராட்டம் என்றால் அது அறவழியிலும் இப்படியும் முன்னெடுக்கலாம் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

நாளைய இந்திய சமூகத்திற்கு மெரீனா கடற்கரையில் இப்பொழுது நடந்துவரும் போராட்டம் நல்லதொரு பாடமாக, வரலாறாக மாறியிருக்கிறது.

ஒரு தன்னெழுச்சியான போராட்டம் அரசாங்கங்களை அடங்க வைத்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

தமிழர்களும், தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் யுவதிகள் விழித்துவிட்டார்கள். இனி தமிழகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அரசியல்வாதிகள் நிதானமாக சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இனி ஒரு விதி செய்வாய்…! என்னும் பாரதியின் வரிகளுக்கு இணங்க புது சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டிற்கான தடை அதை உடை என்று தொடங்கினார்கள். இன்று புது சரித்திரம் படைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் நாளைய தலைவர்களுக்கு.