மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பும் இந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழு இன்னும் ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகள் ஆகியோருக்கு குறித்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.