கலவர பூமியான மெரீனா : போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை!!

286

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றத் துவங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மெரினா கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஒலி பெருக்கி மூலமாக போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அதனை ஏற்காத இளைஞர்கள் ‘ஜல்லிக்கட்டு வேண்டும்’ என கோஷங்களை எழுப்பத் துவங்கினர்.

காலை 6 மணி அளவில் போராட்டக்காரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்ற காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றத் துவங்கினர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இன்று காலை தமிழக சட்டமன்ற கூட்டத் தொடங்க உள்ளதாலும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருப்பதாலும் தமிழக காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.