பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய ஆர்.கே.செல்வமணி : பகிரங்க மன்னிப்பு கேட்டார்!!

342

r-k-selvamani-300-

பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இன்று தன்னுடைய பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ‌கலந்து கொண்டார். இவ்விழாவில் ஆர்.கே.செல்வமணி, பேசியதாவது..

நான் திரையுலகில் தமிழுக்காக, தமிழர்களுக்காக எவ்வளவோ போராடி வருகிறேன். ஆந்திராவில் இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்தும் தெலுங்கு நடிகர் சங்கம், தெலுங்கு இயக்குநர் சங்கம் என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.

அதேமாதிரி கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கூட கன்னட, மலையாள இயக்குநர், நடிகர் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால் இங்கு சென்னையில் மட்டும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதுமாதிரி தான் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் சங்கம் என்று இருந்த பெயரை பெரும் முயற்சி செய்து தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் என்று மாற்றினேன். இதை மற்ற சங்கங்களுக்கும் செயல்படுத்த முற்படுத்தப்பட்டபோது என்னை அந்தந்த சங்கங்களில் இருந்து கழற்றிவிட்டு விட்டனர்.

இதையெல்லாம் யார் கேட்பது என்றார். அதோடு நிறுத்தாமல் பத்திரிக்கையாளர்களை பேச ஆரம்பித்து விட்டார். இதோ தமிழ் எனும் குறும்பட விழா நடத்தி வருகிறோம். இதுவே வேறு எதுவும் சினிமா விழாவாக இருந்தால் இங்கே முன் வரிசையில் ஒரு பத்து பதினைந்து நாய்கள் புகைப்படம் பிடித்து கொண்டு இருக்கும், நான்கு சீட் தள்ளி ஒரு முப்பது நாப்பது நாய்கள் போட்டி போட்டு வீடியோ கமரா மூலம் வீடியோ எடுத்து கொண்டு இருக்கும்.

இதோ இந்த இருக்கைகளில் ஐம்பது அறுபது நாய்கள் ஏதோ தாங்கள் தான் படைக்கும் பிரமாக்கள் மாதிரி கையில் பேனாவையும், பேப்பரையும் வைத்து கொண்டு இங்கு நடப்பதையெல்லாம் கிறுக்கி கொண்டு இருப்பார்கள். ஆனால் தமிழ் என்ற பெயரில் குறும்படம் உருவாகும் போது ஒரு நாயையும் காணோம்.

இதுதான் தமிழின் நிலை என்று பத்திரிகையாளர்கள் யாரும் அந்த அரங்கத்தில் இல்லாத தைரியத்தில் ஏக வசனத்தில் திட்டி தீர்த்துள்ளார். ஆர்.கே.செல்வமணி இவ்வாறு பேசும்போது அக்குறும்படம் சம்பந்தப்பட்ட இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்டவர்களும் அதேமேடையில் செல்வமணியின் பேச்சை ரசித்த படி அமர்ந்து இருந்தனர்.

செல்வமணியின் இந்த பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆர்.கே. செல்வமணி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இயக்குநர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இன்று காலையில் இயக்குநர்கள் சங்கத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.