வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள் : ப.உதயராசா!!

802

உலக விடுதலைப் போராட்டங்களில் எடுத்து நோக்குகையில் ஈழ விடுதலை போராட்டம் மூலமே சர்வதேசத்துக்கு ஈழத்தமிழரின் அவல நிலையை எடுத்துக்காட்டிய நாம் இன்று மீண்டும் ஒரு முறை இந்த உண்ணாவிரதத்தின் மூலம் எம் ஒற்றுமையையும், எம் அவல நிலையையும் இலங்கையின் நல்லாட்சி அரசுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துகாட்டுவதோடு இப் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களும் இப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

இலங்கையில் யுத்தம் நடந்த காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரான காலங்களிலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்படும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி பல கட்டங்களாக போராட்டங்களை மேற்கொண்டு எந்தப்பயனும் இல்லாமல் தங்களின் உயிரை மாய்த்தேனும் உறவுகளை மீட்கவென வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கும் உறவுகளுக்கு சிறி ரெலோ கட்சி தனது பூரண ஆதரவினை வழங்குவதோடு நம்மால் இயன்ற அளவிற்கு இது தொடர்பான அழுத்தங்களை அரசுக்கு வழங்கவும் தயாராகி வருகின்றோம் .

காணாமல் போன தமது உறவுகளைத் தேடி பல போராட்டங்களை நடத்தி மனமுடைந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிப்புக்குள்ளான இவர்கள் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருப்பது குறுகிய நாட்களில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்திவிடும் என்பதனை உணர்ந்து அரசாங்கமும் காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்வினைப் பெற்றுத் தருவோம் எனக்கூறி தேர்தல் வெற்றிகளை பெற்று அரசாங்கத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி அரசுடன் நல்லுறவை பேணிவரும் தமிழ் பிரதிநிதிகளும், ஊடகங்களின் புகைப்பட கருவிக்கு முன்பாக நின்று பேசுவதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு போராட்டத்தில் பங்குபற்றியுள்ள அப்பாவி உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு

ஜல்லிக்கட்டுக்காக நாட்டின் பல பாகங்களிலும் திரண்டு போராடியது போன்று இந்த போராட்டத்துக்கும் ஆதரவு வழங்கி சகல இடங்களிலும் இளைஞர்களும், பொதுமக்களும் இந்த போராட்டத்தை உலகறியச் செய்து உரியவர்களுக்கு போதிய அழுத்தத்தை வழங்க வேண்டுவதுடன் இப் போராட்டத்தை காணாமலாக்கப்பட்டவர்களுக்கும், அரசியல் கைதிகளுக்கும் சரியான தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடிய போராட்டமாக மாற்றியமைப்பது தமிழர்கள் அனைவரது கைகளிலுமே தங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயற்பட அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.