வவுனியா தனியார் மற்றும் அரச பேரூந்துகளுக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வு!!

534

 
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தும் விடயத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலை அதனால் மக்கள் அடைந்த அசௌகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த விசேட கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடக்கு சுகாதார அமைச்சரின் பிரதிநிதியாக அவரது இணைப்புச் செயலாளர், வவுனியா மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பிரதி பொலிஸ்மா அதிபர், இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர், மாவட்ட அதிகாரிகள், வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர், வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த ஒன்றுகூடலானது சுமார் 04 மணிநேரம்வரை இடம்பெற்றது, முடிவிலே இது தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வவுனியாவில் போக்குவரத்து தொடர்பாக இருக்கும் பிரச்சினைக்ளுக்கு ஒரு தீர்வு பெற்று மக்களது போக்குவரத்தை சீர் செய்யும் நோக்கோடு இன்றய தினம் நடாத்தப்பட்ட கூட்டத்தின்மூலம் இரண்டு தரப்பினரும் தங்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதேவேளை ஆரம்பத்தில் இரண்டு தரப்பினருமே ஒரு விட்டுக்கொடுப்புநிலைக்குள் வருவதற்கு முன்வரவில்லை அதனைத் தொடர்ந்து நாங்கள் பொறுமைகாத்ததன் வாயிலாக இறுதியில் இரண்டு தரப்பினரையும் அதேவேளை வர்த்தக சங்கத்தினரையும் ஒரு சமரசமான முடிவிற்கும் கொண்டுவந்திருக்கின்றேன். இதில் உள்ள இந்த மூன்று தரப்பினருக்கும் அப்பால் எனது பொதுமக்களது நலனை கருத்திற்கொண்டே இந்த முடிவினை நான் எடுத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து குறிப்பாக புதிய பேரூந்து நிலயத்தினுள் இலங்கை போக்குவரத்து சபையினர் வர மறுத்த காரணத்தாலேயே இந்த முறுகல் நிலை ஆரம்பத்தில் ஏற்பட்டது, அதனடிப்படையில் தற்போது சகல உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகளும் வவுனியா நகரத்தின் மையத்தில் உள்ள பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவைகளை ஆரம்பித்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கிராமத்தை நோக்கி செல்லவேண்டும் என்றும்,

அதே போல வவுனியா மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகள் அனைத்தும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்து பழைய பேரூந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் அங்குள்ள பயணிகளையும் ஏற்றிக்கொண்டு தமது சேவையை நடத்துவார்கள் என்றும் அதேபோல ஏனைய மாகாணங்களில் இருந்து வரும் சகல தூரசேவை பேருந்துகளும் புதிய பேரூந்து நிலையத்தின் நுழைவாயில் வழியாக உள்சென்று தரித்து நிற்காமல் பயணிகளை இறக்கி பின் தமது பயணத்தை தொடருவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இந்த முடிவிற்கு மூன்று தரப்பினரும் ஒத்துக்கொண்டதோடு, 26ம் திகதி முதல் (இன்று) சேவைகள் மேற்கூறப்பட்டவகையில் நடைபெறும் என்றும், நேரக்கணிப்பாளர்கள் ஒழுங்குகளை கவனித்துக்கொள்ளுவார்கள் என்றும், இதன்மூலம் மக்களது போக்குவரத்தும் சீரானதாக அமையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.