தமிழ்நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடையால் ஆசிரியர் ஒருவரின் விரல்கள் துண்டான பரிதாப சம்பம் நடைபெற்றுள்ளது.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ரொபட். சென்னையில் உள்ள தனியார் நிறுவன அலுவலர். அவரது மனைவி பிளாரன்ஸ்(39). இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு கிளம்பும் கணவருக்காகவும் பள்ளிக்கு செல்லும் தனக்கும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். குழம்புக்கு தேவையான மசாலா பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக்கொண்டிருக்கையில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
வேலைக்கு தயாராகும் நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதில் எரிச்சலான பிளாரன்ஸ் மிக்சியில் இருந்த மசாலாவை எடுத்து அம்மியில் அரைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக மசாலாவை மிக்சியில் இருந்து வழித்து எடுத்த போது திடீரென மின்சாரம் வந்தது. அதனால் மிக்சி பிளேட்கள் சுழல ஆரம்பித்தன.
அதில் மசாலாவை வழித்துக் கொண்டிருந்த பிளாரன்ஸ் விரல்கள் பிளேடில் சிக்கி துண்டாகியது. வலது கையில் உள்ள 4 விரல்களின் முனைகளும் துண்டான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சேதமடைந்த விரல் முனைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
மின்தடை ஏற்பட்டதும் சுவிட்சை அணைக்காமல் மிக்சியை பயன்படுத்தியதால் வந்த பிரச்னை. எப்போது போகும் என்று தெரியாத மின்சாரம் மீண்டும் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் அப்பாவி பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனவே மின்தடை ஏற்பட்டதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மிக்சி, கிரைண்டர், அயன் பொக்ஸ், டிவி, ரேடியோ, வாஷிங் மெஷின் ஆகியவற்றை நிறுத்தி விடுவது நல்லது. இல்லாவிட்டால் பொருட்களுக்கு மட்டுமல்ல அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்து.