சென்னை வன்முறை தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்கள்!!

278

சென்னையில் கடந்த 23ம் திகதி அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது எவ்வாறு? என்பது தொடர்பாக கூடுதல் ஆணையாளர் சங்கர் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு செவ்வியளித்தார். அப்போது அவர் வன்முறை சம்பவத்தை ஆரம்பத்தில் இருந்து விளக்கினார்.

குறிப்பாக அவர் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடந்த 23ம் திகதியன்று அமைதியான முறையில் கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். பொலிஸார் லத்தி இல்லாமல் வெறும் கையுடன் தான் இருந்தனர்.

ஆனால் பொலிஸாஸார் தடியடி நடத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பிவிட்டார்கள். இந்த நிலையில் மாணவர்கள் போர்வையில் விஷமிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.

பின்னர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்களை கூடுதல் ஆணையாளர் சங்கர் பத்திரிகையாளர்களுக்கு திரையில் போட்டு காண்பித்தார்.

அதில், ஐஸ் அவுஸ் பொலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது, எழும்பூர் நாயர் பாலத்தில் இணை ஆணையாளர் சந்தோஷ்குமார் கார் கலவரக்காரர்களால் தாக்கப்படுவது, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் சூறையாடப்படுவது உள்பட பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக மெரினாவை ஒட்டியுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதற்காக பெண்கள் வீட்டு வாசலில், மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து பாக்கெட்டில் அடைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பரபரப்பு காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு வருவதாக கூடுதல் ஆணையாளர் சங்கர் தெரிவித்தார்.

பேட்டியின் போது கூடுதல் ஆணையாளர் சேஷசாயி உடனிருந்தார். அவரிடம் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோவுக்கு தீ வைத்த போலீசார் மீது மட்டும் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சேஷசாயி பதில் அளித்து கூறும்போது, ‘2 பொலிஸாரை மட்டும் வைத்து ஒட்டுமொத்த போலீசாரையும் மதிப்பிடக் கூடாது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸார் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை (நாளை) தெரிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது பின்லேடன் படத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக வாசங்களை ஏந்தி நின்ற நபர்கள் ஆகியோருடைய படங்களை கூடுதல் கமிஷனர் சேஷசாயி வெளியிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் கண்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.