மாங்குளம் பகுதியில் பேரூந்து விபத்து : 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!!

220

 
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து மாங்குளத்தில் நேற்று (29.01.2017) இரவு 9.15 மணியளவில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.

யாழ் காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவ நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வீதியில் நின்ற எருமை மாட்டு கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன.

வீதியில் நின்ற மாட்டுக் கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்றதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் சிலரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் பலியான மற்றும் காயமடைந்த மாடுகளின் பெறுமதி 15 லட்சத்துக்கும் மேலானதாகும். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைய காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதோடு அதிகளவான கால்நடைகளும் அழிந்து வருகின்றன.

கால்நடைகளால் பயனை அடையும் உரிமையாளர்கள் அவற்றை உரியவகையில் கட்டி வளர்த்து பராமரித்தால் இவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டு பெருமளவில் வருமானத்தை ஈட்டித்தரும் கால்நடைகள் அநியாயமாக அழிந்து போவதை தடுக்கலாம் என்பதோடு அநேகமான விபத்துக்களையும் மனித உயிரிழப்புக்களை தவிர்க்கமுடியுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.