வவுனியாவில் கிராமசேவையாளர் கைது!!

668

வவுனியாவில் நேற்று (29.01.2017) மதியம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து பொருட்கள் சிலவற்றை களவாடி தனது அலுவலகத்தில் வைத்திருந்துள்ளதாக தெரிவித்து நெளுக்குளம் கிராமசேவையாளரை பொலிசார் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்கும் தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு பின்புறமாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டடப் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அவர்களின் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் சில பொருட்களை நெளுக்குளம் கிராமசேவையாளர் அதிகாலை வேளை களவாடியுள்ளதாக குறித்த நீர் தாங்கி அமைக்கும் பகுதியில் பாதுகாப்புக் கடமையிலுள்ள ஊழியர் அங்கு பணிபுரியும் தொழிநுட்பவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் கிராம சேவையாளரின் காரியலாயத்திற்குள் வெளியிலிருந்து உள்ளே பார்வையிட்டபோது குறித்த நிறுவனத்திற்குரிய பொருட்கள் கட்டட நிர்மாணப்பணிக்குப்பயன்படுத்தும் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் கிராமசேவையாரை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்ற ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவருகின்றது.