நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 3 சிறுவர்கள் உயிரிழப்பு, 57 பேர் காயம்!!

216

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், வெளிநாட்டு பிரஜைகள் ஆறு பேர் உள்ளிட்ட 57 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்வி பத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி இன்று அதிகாலை ஐந்து முப்பது அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தின் போது காயமடைந்த 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று குடைசாய்ந்துள்ளதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்புளை – ஹபரண பிரதான வீதியில் இன்று அதிகாலை குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பஸ் வீதியைவிட்டுவிலகி விபத்துக்குள்ளாகியிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகளில் சீகிரிய பொலிஸார் மற்றும் பொதுமக்களும் இணைந்து செயற்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மொறட்டுவைப் பல்கலைகழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மாங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் நின்றுக் கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி நேற்றிரவு ஒன்பது முப்பது அளவில் குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 50 மாணவர்கள் பஸ்சில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடடைந்த மாணவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது எருமை மாடுகளும் உயிரிழந்துள்ளன. விபத்து ஏற்பட்ட போது ஏ – 09 வீதியில் மாங்குளம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை நீர்கொழும்பு கற்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நியூஸிலாந்து பிரஜைகள் ஆறு பேர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வேன் ஒன்றுடன் காரொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.