முச்சக்கரவண்டிக்கு தீவைத்த பொலிஸ் சிக்கினார்!!

268

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் பொலிஸ் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிக்கியுள்ளார்.

சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ம் திகதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கடந்த 21ம் திகதி கொண்டு வந்தது.

அதன்பின்னரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாத காரணத்தால், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடித்தது.

இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதற்கிடையே கலவரத்தை பயன்படுத்தி பொலிசாரே பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் பொலிஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், பொலிஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரும் யார் என்பதை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.