இலங்கை சிறையில் அடைப்பட்டுள்ள நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி படகுகளில் வெள்ளை கொடி ஏந்தி இலங்கை அரசிடம் தஞ்சம் புகுவது என நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், நாகை, அக்கரைப்பேட்டையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள், அவர்களின் விசைப்படகுகளை மீட்க, மத்திய அமைச்சர் மூலம், பிரதமரை சந்தித்து கேட்டுக் கொள்வது; தமிழக மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களையும் சந்தித்து, மீனவர்களை மீட்க வலியுறுத்துவது.
காரைக்கால் மாவட்டம் முதல், ராமநாதபுரம் மாவட்டம் வரை, அனைத்து மீனவ கிராமங்களையும் ஒருங்கிணைத்து, மீன்பிடி விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி ஏற்றி, இலங்கை சென்று, தஞ்சம் அடைவது,
நாளை முதல், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.