அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள முதலாவது இராணுவ நடவடிக்கையில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெற்கு யேமனில் அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 16 பொது மக்கள் உள்ளிட்ட 57 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது அமெரிக்க இராணுவ கொமான்டோ ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பலம்கொண்ட அல் பைதா மாகாணத்தில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையில் இராணுவ ஹெலிகொப்டர்கள் பல ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், யக்லா மாவட்டத்தில் தரைவழியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மூன்று அல் கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த அதிரடி இராணுவ நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் ஆறு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாட்டுக்குள் பலரும் சிக்கியிருக்கலாம் எனவும், யேமன் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






