வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அரச – தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் : இருவர் கைது!!

271

 
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (01.02.2017) காலை 10 மணியளவில் இ.போ. ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் எற்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த இ.போ.ச சாலை சாரதி மற்றும் முல்லைத்தீவிலிருந்து வந்த தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே பலத்த சண்டை ஏற்பட்டதில் இ.போ.ச சாரதி படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைகலப்பினையடுத்து இ.போ.ச சாரதிகள் தமது தூரசேவை பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு எடுத்து வந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்குச் சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி புதிய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு எடுத்துவந்த தூர சேவை பேரூந்துகள் அனைத்தையும் புதிய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் சேவைகளை மேற்கொள்ளுமாறும், சேவை மேற்கொள்ளாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக கடந்த மாதம் அரச அதிபர், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக சேவைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பேரூந்து நிலையத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடமாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர், தனியார் பேரூந்து, அரச பேரூந்து சாரதிகள் ஆகியோர் இடையே கலந்துரையாடல் இடம்பெற்று தற்போது சுமுகமான போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.