வவுனியா இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

425

 
வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் இன்றிலிருந்து தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து தனியார் பேரூந்தினருக்கும் இ.போ.ச பேரூந்தினருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டு இரு தரப்பினருக்கு இடையில் சமரசம் செய்து வைக்கப்பட்டாலும் பிரச்சினை தீர்வுக்கு வந்ததாகவே இல்லை.

இ.போ.ச ஊழியர்கள் இன்று வடமாகாண ரீதியாக இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் இன்றைய தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கொழும்பு சென்றிருப்பதால் நாளைய தினம் அவருடன் கலந்துரையாடி உடனடியாக இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.