சென்னை ஹோட்டல் சிப்பந்தி (வெய்ட்டர்) ஒருவர் வழங்கிய ஆலோசனையின் பலனாகவே சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டம் நுட்பத் திறன்மிக்கதாக மாறியது. அவரது ஆலோசனையைப் பின்பற்றியதன் மூலம் சச்சினின் துடுப்பாட்டம் பிரகாசமடைந்தது. இது குறித்த தகவலை சச்சின் டெண்டுல்கரே வெளியிட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவகை பிரதான சர்வதேச கிரிக்கெட் அரங்குகளில் துடுப்பாட்ட உலக சாதனையாளரான சச்சின் டெண்டுல்கருக்கு ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் ஆலோசனை வழங்குவதென்பது வழமைக்கு மாறானதாக இருக்கலாம். ஆனால் அந்த ஆலோசனை தன்னை வெகுவாக முன்னேற வைத்ததாக அவரே கூறுகின்றார்.
ஒரு முறை நான் சென்னை சென்றிருந்தபோது ஹோட்டலில் வைத்து சிப்பந்தி ஒருவர் தன்னை அணுகி ஆலோசனை ஒன்று வழங்கலாமா என தன்னிடம் கேட்டதாக சச்சின் கூறுகின்றார்.
‘‘நான் ஹோட்டலில் இருந்தபோது என்னை அணுகிய ஹோட்டல் சிப்பந்தி, நீங்கள் துடுப்பை சுழற்றும்போது உங்களது முழங்கை காப்பில் (எல்போ கார்ட்) துடுப்பின் கைப்பிடிப் பகுதி படுவதால் அதன் சுழற்சி தடுக்கப்படுகின்றது என என்னிடம் சுட்டிக்காட்டினார். அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அவரது கணிப்பு மிகவும் சரியானது’’ என சச்சின் தெரிவித்தார்.
‘‘திறந்த மனதுடன் இருந்தால் பல விடயங்களில் முன்னேறமுடியும். முழங்கை காப்பு எனக்கு அசௌகரியத்தைக் கொடுக்கின்றது என்பதை உணர்ந்திருந்தேன். ஆனால் நானாகவே மாற்ற முன்வரவில்லை. சில வருடங்களின் பின்னர் எனது முழங்கை காப்பில் பந்துபட்டபோது நான் பெரும் உபாதைக்குள்ளானேன். அதன் பின்னரே முழங்கை காப்பினுள்ள இருந்த திட்டு போதாது என்பதை உணர்ந்தேன்.
அத்துடன் துடுப்பை இலகுவாக சுழற்றக்கூடிய விதத்தில் முழங்கை காப்பின் வடிவத்தையும் மாற்றி அமைத்தேன். நமது தேசத்தில் வெற்றிலை விற்பவரிலிருந்து பிரதம நிறைவேற்று அதிகாரிவரை ஆலோசனை வழங்கக்கூடியவர்கள். ஆனால் அவற்றை ஏற்கும் மனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்’’ என்றார் சச்சின்.






