நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள்!!

227

நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்யாது போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கும் மற்றும் பொலிஸாருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள்களை பதிவுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும், வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை அனுமதியூடாக இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை பதிவுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்.

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள் தருவிக்கப்பட்டு அவை பொருத்தப்பட்டு, அவற்றுக்காக போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் அதிகளவான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் ஊடாக இடம்பெறுகின்றன.

வாகனங்களை பதிவுக்கு உட்படுத்துவதற்கு சலுகைக் காலமொன்று வழங்கப்பட்டிருந்தது.எதிர்வரும் நாட்களில் மீளவும் இவ்வாறான சலுகைக் காலமொன்று வழங்கப்படும் என ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதிப் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு புள்ளிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் முறையொன்றும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்