பெண்களின் எலும்பை உடைத்த பொலிசார் : மக்கள் குமுறல்!!

281

போலீசின் காட்டுமிராண்டித்தனத் தாக்குதலால், மெரினா சுற்று வட்டார அப்பாவிகள் அதிர்ச்சியிலிருந்தும் காயங்களின் வலியிலிருந்தும் இன்னும் மீளமுடியாமல் இருக்கிறார்கள்.

ஐஸ்அவுஸ் பகுதி வாத்தியார் சின்னையா தெரு, மெக்கானிக் மகேந்திரன்,

அன்னைக்கு கலவரமா இருந்திச்சி…. கடைய மூடிட்டு என்னோட அக்காவைக் கூட்டிட்டுவர வண்டில போனப்போ, போலீஸ்காரங்க வண்டிய லத்தியால அடிச்சாங்க. கீழ விழுந்த என்னை, பத்து போலீஸ்காரங்க சேந்து அடிச்சாங்க. கால் உடைஞ்சு போச்சு. எப்படியும் கால் சரியாகி, எலும்பு கூடுறதுக்கு மூணு மாசம் ஆகும். அதுவரைக்கும் என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவா?” என வேதனையைக் கொட்டினார்.

நடுக்குப்பம் நான்காவது தெருவைச் சேர்ந்த மணிவாசகம்மாள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு விழுந்ததில், அவருக்கு தோல் உரிந்து, ஒரு வாரமாக மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம், ரூதர்புரம் தினகரன்,

என் மகன் கிருபாகரன் 2 மாணவன். அவன் போராட்டத்திலே இல்லை. சும்மா இருந்த பையனைப் பிடிச்சிட்டுப்போன போலீஸார், சிறையில் அடைச்சிட்டாங்க. படிக்கிற பையனோட வாழ்க்கையே போச்சு. ஸ்டேசன்ல வச்சு போலீஸ் அடிச்சதுல அவனோட கை உடைஞ்சுபோச்சு. ஜாமீன் எடுக்க பத்தாயிரம் ரூபாயும், இரண்டு ஆர்.சி. புக்கும் வேணுமாம். அப்போதான் ஜாமீன் வாங்க முடியுமாம் என்றார் வருத்தமாக.

அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்,

போலீஸ்காரங்க சுத்திச் சுத்தி வந்து வீட்டுக் கதவை ஒடைச்சி வீட்ல சும்மா இருக்கிற ஆம்பளப் பசங்கள புடிக்கிறதால, பயந்து போன என்னோட மூத்த மகன் சக்திவேலு அவங்க பாட்டி ஊருக்குத் தப்பிச்சி ஆட்டோவுல போனப்போ எதிரே வந்த வேன் மோதி, செத்துப்போயிட்டான். எம்புள்ளைக்கு 26 வயசு. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போலீஸ் அராஜகத் துல இல்லாமலே போயிட்டானேப்பா…என மகனை இழந்த துயரத்தில் கதறினார்.

மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த பொற்கொடியை பெண் என்றும் பார்க்காமல் ஆண் போலீசாரும் பெண் போலீசாரும் தாக்கியதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு, உடல் முழுவதும் இரத்தம் கட்டிய காயம்.

சிறுவன் மணி சொல்வதைக் கேட்கும் எந்தக் கல்நெஞ்சக்காரனின் மனமும் கரைந்துவிடும், அவ்வளவு துயரம்.

என் பேர் மணி. அம்பேத்கர் பாலத்துகிட்டதான் வீடு. 2 படிக்கிறேன். அன்னைக்கு அக்கா வீட்டுக்குப் போயிட்டு வந்தப்போ போலீஸ்காரங்க ஜீப்புல ஏத்திக் கொண்டுபோயி செம அடி அடிச்சாங்க. வலி தாங்க முடியாம மயங்கிட்டேன். வேற 20 பேரயும் போலீஸ்காரங்க புடிச்சாங்க. எல்லாரையும் அடிச்சது இல்லாம பேண்ட் சட்டையக் கழட்டி ஒண்ணுக்குப் போற எடத்துலயும் அடிச்சாங்க. வலி தாங்கமுடியாம கத்தினேன். உயிரோடு வீட்டுக்குப் போவோமானு சந்தேகமா இருந்துச்சி.

எங்க ஏரியா செல்வா அண்ணா வேலைக்கி போயிட்டு நைட் வீட்டுக்கு வந்தப்போ அவரையும் புடிச்சிட்டு வந்துட்டாங்க. ரொம்ப சீரியஸ் ஆனதுனால அவரை மட்டும் தனி வேன்ல ஏத்திட்டுப் போனாங்க. அவ்வளவுதான் தெரியும்.

எங்களை யெல்லாம் புழல்ல போட்டாங்க. தினமும் செங்கல்பட்டு போயி கையெழுத்து போடணுமாம். என்னோட படிப்பே அவ்வளவுதான் போல! அடுத்த மாசம் முழு ஆண்டுத் தேர்வு…”’என வறுமையிலும் கதறிய அந்த மாணவப் பிள்ளைக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை நம்மிடம் இல்லை.

மணி சொன்ன செல்வாவை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சந்தித்தோம். ஐ.சி.யு. வார்டில் இருந்த செல்வாவுக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றியுள்ளனர், மருத்துவர்கள்.

அன்னைக்குப் பிடிச்சிட்டுப் போனப்போ ஸ்டேசன் போனதும் அடிச்சாங்க. செத்துட்டேன்னுதான் நினைச்சேன். கண்ணு முழிச்சிப் பார்த்தா சுடுகாட்டுல இருந்தேன். யாரோ ஒருத்தர் உதவியால விடியகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து, மறுநாள் 24-ந் தேதி காலையில ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். நான் நடக்கவே எப்படியும் ஆறு மாசமாகும்” என்றார் வேதனையுடன்.

மீனாம்பாள்புரம் வாசுகி,

சம்பவம் நடந்தப்போ வீட்டுல சமைச்சிட்டு இருந்தேங்க. கதவ உடைச்சிட்டு உள்ளபூந்த பெண் போலீஸ்காரங்க, “எங்கடீ உங்க வீட்டு ஆம்பள’னு கேட்டு அடிச்சாங்க. என்னோட வயசக்கூடப் பாக்கல. அவ்வளவு கேவலமா பேசினாங்க. ராயப்பேட்டை ஆஸ்பிட்டலுக்குப் போயி “போலீஸ் அடிச்சி இப்படி ஆயிடுச்சி’னு சொன்னோம். வைத்தியமே பாக்காம டிஞ்சர் போட்டு அனுப்பிட்டாங்க. தனியார் ஆஸ்பிட்டல் போனா கை, கால் எலும்பு உடைஞ்சிருக்குனு சொன்னாங்க. கட்டுப் போட்டுட்டு வந்திருக்கேன். பக்கத்து வீட்டு திலகவதி, சாந்திக்கும் மண்டை, கை, கால் எலும்பு உடைப்புதான்.

அ.தி.மு.க. தலைமையகம் உள்ள லாயிட்ஸ் சாலையில் பழம் விற்கும் மதுரை,

பல வருஷமா இங்க வியாபாரம் செய்றேன். அன்னிக்கி போலீஸ் அடிச்சதுல என்னோட கால் எலும்பே உடைஞ்சு போச்சி. நின்னுதான் வியாபாரம் செய்யணும். இனி பிழைப்பு எப்படினு தெரியல? என அழுகையை அடக்கிக்கொண்டு பேசினார்.

எழும்பூர் டாக்டர் சந்தோஷ்நகர் பொன்னம்மாளை பிடித்துவைத்த போலீசார், சில வீடியோக்களைக் காட்டி அதில் உள்ளவர்களை அடையாளம் காட்டச் சொல்லி அடித்துள்ளனர். பெண் போலீசார் அவரது ஆடையைக் கழற்றி தொடையில் லத்தியால் தாக்கியுள்ளனர்.

போலீசின் அடக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்ம ஆவேசமும் குமுறலும் நீதிதேவதையின் மனசாட்சியை உலுப்புமா?

-நக்கீரன்-