செத்து மிதக்கும் கடல் உயிரினங்கள் : எங்கே போனது பீட்டா : கொந்தளிக்கும் மக்கள்!!

472

கடலில் கச்சா எண்ணெய் கலந்து மிகப்பெரும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயரினங்கள் செத்து மிதக்கும் நிலையில் விலங்குகள் நலத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா எங்கே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் 28ம் திகதி சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கடலில் கசிந்து கடற்பரப்பு முழுதும் பரவியது.

தற்போது எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை எண்ணெய் படலம் பரவி கடல் மாசுபட்டுள்ளது. இயந்திரம் கொண்டு சுத்தம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் கடலோர காவல் படையினர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பக்கெட் கொண்டு கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்து வருவதால் 7 நாட்கள் ஆகியும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மீன்பிடி தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள் ஆகியும் எந்த அரசியல் கட்சியினரும் கடலை சுத்தம் செய்ய முன்வரவில்லை. தூய்மை இந்தியா திட்டம் என்று சொல்லும் மத்திய மோடி அரசு, சமூக தொண்டாற்றும் உயரிய அமைப்பு என சொல்லிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஆகியன அந்த இடத்திற்கே வரவில்லை.

விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட தனது கட்சியினரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்படி கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

திமுக, அதிமுக ஆகிய பழமையான கட்சிகளும் இதுவரை சுத்தம் செய்வது குறித்து மவுனம் காக்கின்றன. கச்சா எண்ணெய் படலத்தில் சிக்கி ஏராளமான ஆமைகள், நண்டுகள், மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று மல்லுக்கட்டிய பீட்டா அமைப்பினர் எங்கே போனார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழரின் கலாச்சாரத்தை முடக்க அத்தனை முனைப்புடன் இருந்த பீட்டா அமைப்பு இப்போது உயிரினங்கள் சாகும் போது எங்கே சென்றார்கள் என்றும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.