சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர உலக நாடுகள் தீவிரம்!!

328

syria_chemical_weaponரசாயன ஆயுதங்களை ஒழிக்கா விட்டால் சிரியா மீது தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா சபையில் கொண்டுவரும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதில் 1400 பேர் இறந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. அந்நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்தது.

எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சிரியா அரசு மறுத்தது.
இதனிடையே சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஐ.நா. நிபுணர்கள் புலன்விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கள் விசாரணையை முடித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில் சிரியாவில் அப்பாவி மக்கள் மீது மிகப்பெரிய அளவில் சரின் விஷவாயு பயன்படுத்தப்பட்டதை ஐ.நா ரசாயன நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.

எனினும் சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது யார் அரசுத் தரப்பா அல்லது கிளர்ச்சியாளர்களா என்பது குறித்து ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறுகையில்..

சிரியாவில் இவ்வளவு பெரிய அளவில் ரசாயன ஆயுதத் தாக்குதலை ஆட்சியாளர்களால் மட்டுமே நடத்தியிருக்க முடியும் என்பது ஐ.நா. அறிக்கையின் தொழில்நுட்ப விவரங்கள் மூலம் தெளிவாகிறது. இத்தாக்குதலுக்கான பொறுப்பை அதிபர் பஷார் அல் அஸாத் அரசுதான் ஏற்க வேண்டும் என்றார்.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் ஃபேபியஸ் கூறுகையில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு சிரியா அரசுப் படைகள்கதான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் கூறுகையில் அப்பாவி மக்கள் மீது சரின் விஷவாயு செலுத்தப்பட்டதன் பின்னணியில் சிரியா அரசு இருப்பதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

இந்நிலையில் ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை சிரியா நிறைவேற்றாவிட்டால் அந்நாட்டின் மீது தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர மேற்கத்திய நாடுகள் தீவிரமாக உள்ளன.

இதற்கான வரைவுத் தீர்மானத்தை பிரான்ஸும் பிரிட்டனும் விரைவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பு நாடுகளுக்கு அனுப்ப உள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தையை பாதுகாப்பு கவுன்சில் இந்த வாரம் தொடங்க உள்ளது.

தரையில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளைக் கிளர்ச்சியாளர்கள் வைத்திருப்பதாகவும் அவர்கள்தான் அவற்றின் மூலம் சரின் விஷவாயுத் தாக்குதலை நடத்தியதாகவும் சிரியா அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்..

நாங்கள்தான் (அரசு) ரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தினோம் என்று கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். இது போன்ற தாக்குதல் உத்திகளை போரில் தோற்பவர்கள்தான் பின்பற்றுவார்கள். தோல்வி முகம் கண்டுவரும் கிளர்ச்சியாளர்களே இதைச் செய்துள்ளனர். மாறாக, எங்கள் ராணுவம் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது என்றார்.

முன்னதாக சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது போர்க் குற்றம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.