மியன்மாரில் 100 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : ஐ.நா அதிர்ச்சித் தகவல்!!

314

 
மியான்மார் இராணுவத்தினரின் நடவடிக்கையில் இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்ட ரொஹிங்யா முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினருக்கும், ரொஹிங்யா முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வந்தது. குறித்த மோதலில் முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால், ஏராளமானோர் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாக குடியேறினர்.

ரக்கினே பகுதியிலிருந்து ரொஹிங்யா முஸ்லீம்களை அப்புறப்படுத்தும் பணியில் மியான்மர் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம்பெற்றுள்ளதோடு, அந்நாட்டு இராணுவம் இனஅழிப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டனர்.

மேலும் கடந்தவாரம் வெளியாகவிருந்த விசாரணை அறிக்கைகளும், அந்நாட்டு அரச தலையிட்டால் பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர் ராணுவத்தினரின் நடவடிக்கையில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம். எனவும் பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பலியானவர்களில் கணிசமான குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் குறித்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் சயீத் ராத் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளதாவது, மியன்மார் அரசை தம் கண்டிப்பதாகவும், அந்நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

பெளத்தர்கள் அதிகமாக வாழும் மியன்மாரை, நோபல் பரிசு பெற்ற ஆன் சாங் சூகி ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் சிறுபான்மையினர் மீது அதிக கவனம் செலுத்துமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மியன்மார் அரசை வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.