வலுக்கும் பனிப்போர் : அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா!!

268

12000 கி.மீ தொலைவில் வெவ்வேறு பத்து நிலைகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை ஒன்றை சீனா பரிசோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கு மேலதிக அழுத்தம் தரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவின் தாயுவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சீனா சோதனை மேற்கொண்டுள்ள DF-5 ரக ஏவுகணை குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளதாகவும், சர்வதே ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஏவுகணை சோதனை முயற்சியில் சீனா மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒருபகுதியாக புதுரக MIRV பேருந்துகளை பயன்படுத்தி வருகிறது.

இதனால் குறிப்பிட்ட எல்லையில் இருந்து பல்வேறு நிலைகளை குறிவைக்க முடியும் என கருதப்படுகிறது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்க பாதுகாப்பு வல்லுனர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னரே சீனா இதுபோன்ற பல நிலைகளை தாக்கும் ஏவுகணைகளை சோதனைக்கு கொண்டு வந்துள்ளது.

தென் சீனக்கடலில் சீனா செயற்கை தீவுகளை அமைத்துள்ளதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுபெற தொடங்கியுள்ளன.

சீனாவின் இத்தகைய ஆதிக்கத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது. எனினும், அமெரிக்காவின் நுழைவிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதன் காரணமான தென் சீனக்கடல் பகுதி பதட்டமான பகுதியாகவே இருந்து வருகின்றது. மேலும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றால் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பார் என கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், சீனா ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.