ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் : திடீர் திருப்பம் : சந்தேகநபர்களுக்கு தொடர்பில்லையாம்!!

529

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி ஊர்காவற்துறை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு நீதிபதி ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணம் செய்திருந்தார்.

இதன்படி, சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் கடந்த 24ஆம் திகதி காலை 11.30 மணியளவில் மருதனார் மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பி உள்ளார்.

அதற்கான ஆதாரமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கெமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனை கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.

அத்துடன், மற்றைய சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நேரத்தில் வேலனைப் பகுதியில் துவிசக்கர வண்டியில் விபத்துக்குள்ளான நிலையில், இந்த பகுதியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனை, குறித்த சந்தேகநபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வதன் மூலம் அவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சந்தேகநபர்கள் உரையாடியதனை வைத்து அவர்கள் எந்த வலையமைப்பில் இருந்து உரையாடியுள்ளார்கள் என்பதனை கண்டறிய முடியும்.

இதன் ஊடாக கொலை இடம்பெற்றதாக கூறப்படும் நேரத்தில் சந்தேகநபர்கள் எந்த பகுதியில் இருந்தார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியும் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளி பதிவுகள், மற்றும் வேலனைப் பகுதியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் சிகிச்சை நிலையத்தின் வைத்தியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிபதி ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான கால பகுதியில் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 24ஆம் திகதி ஊர்காவற்துறை பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.