டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகள் எரியூட்டியமையானது வடமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானது!!

208

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஏற்பதும், மறுப்பதும், விமர்சனம் செய்வதும் ஜனநாயக ரீதியான நிலைப்பாடு என்ற போதிலும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும், நாகரிகமற்ற முறையில் ஏளனப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளவோ,அனுமதிக்கவோ முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (4) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா சம்பந்ததனின் உருவப்படங்கள் வவுனியாவில் எரியூட்டப்பட்டது.

காணாமல் போனோரின் உறவுகள் என்ற பெயரில் ஒருவரின் வற்புறுத்தலாலும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவுமே அது நடந்தேறியதேயொழிய அது வவுனியா மக்களின் நிலைப்பாடு அல்ல.

அதே போன்றே நேற்றைய தினம் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகளை யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னாரில் எரியூட்டியது வடக்குமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானதாகும்.

அமைச்சர் இலங்கை அரச போச்குவரத்துச் சபை ஊழியர்களை விமர்சித்திருந்தால் பதிலுக்கு கருத்துக்களால் விமர்சிப்பதே உகந்த நடைமுறையாகும்.

ஆனால் நடந்த உருவபொம்மை எரிப்பானது வன்முறைக்கு ஒப்பான நிகழ்வு என்பதனால் குறித்த சம்பவம் கண்டிக்கப்படக்கூடியதாகும்,

இலங்கை அரச போக்குவரத்துச்சபை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, போராட்டம் என்பதும், போக்குவரத்து சேவையை நிறுத்தியிருப்பதும் அவர்களின் ஜனநாயக போராட்ட வழி முறையாகும்.

இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகளையும், நியாயப்பாடுகளையும் வலியுறுத்தி, நீதிகோரி நிற்கும் போது முழுமையான ஆதரவு தெரிவிப்பது எம்மைப்போன்ற ஜனநாயகவாதிகளின் கடமையாகும்.

அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதும் எமது கடமையாகும்.

ஆனால் உருவபொம்மை எரிப்பானது மக்கள் பிரதிநிதி ஒருவரை உயிருடன் எரிப்பற்கு ஒப்பான வன்முறை செயற்பாடாகும் என்பதனால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மத்திய மாகாண அரசு மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும் இலங்கை அரச போக்குவரத்து, தனியார் போக்குவரத்து பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டியவையே. புரிந்து கொள்ளலும், விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல் தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இப்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமானதல்ல.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரமான, தீர்வினையும்,முடிவுகளையும் எட்ட வவுனியாவில் இலங்கை அரச போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் என்பன திறந்த மனத்துடன் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் உடன்பாட்டுக்கு வருவது சேவைமனப்பான்மையுள்ள ஒவ்வொரு ஊழியர்களினதும் கடமையாகும்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.