வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருவதாகவும், அதனை ஏற்று கொள்ளமுடியாத செயல் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால் வட மாகாணத்தின் பல இடங்களிலும் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கருத்துக்களை கருத்துக்களால் பேசி தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ஒருவருடைய மனதை நோகடிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் தவிர்க்கப்படவேண்டும்.
எனவே ஒரு சில விரோதங்களுக்காகவும் பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளை முன்னெடுப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தளர்ந்து போகாது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வட மாகாணத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக தொடர்ந்தும் செயற்படவேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






