ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவரான பெண் ஒருவர் 89 வயதிலும் மருத்துவ சத்திரசிகிச்சைகளை செய்கிறார். டாக்டர் எலா இலியினிச்னா லெவுஷ்கினா எனும் இப்பெண், உலகில் தற்போதும் பணியாற்றும் மிக வயதான சத்திரசிகிச்சை நிபுணர் எனக் கருதப்படுகிறார். எதிர்வரும் மே 5 ஆம் திகதி டாக்டர் எலா இலியினிச்னா லெவுஷ்கினாவுக்கு 90 வயதாகவுள்ளது.
இந்நிலையிலும் அவர் வருடாந்தம் நூற்றுக்கும் அதிகமான சத்திரசிகிச்சைகளை செய்கிறார்.
ரஷ்யாவின் ரைஸான் நகர வைத்தியசாலையில் பணியாற்றும் இலியினிச்னா லெவுஷ்கினா வாராந்தம் குறைந்தபட்சம் 4 சத்திரசிகிச்சைகளை செய்கிறார்.
மருத்துவராக பணியாற்ற வேண்டும் என சிறு பருவத்திலிருந்தே இலியினிச்னா லெவுஷ்கினா விரும்பினாராம். இவர் ஓய்வு பெறும் வயதை கடந்து பல தசாப்தங்களாகிவிட்ட போதிலும் தனது அபிமான பணியிலிருந்து விலக விரும்பவில்லை.
தினமும் காலை 8 மணிக்கு இலியினிச்னா லெவுஷ்கினா வேலைக்குச் சென்றுவிடுவாராம். கடந்த 67 வருடங்களில் 10,000 இற்கும் அதிகமான சத்திரசிகிச்சைகளை இலியினிச்னா லெவுஷ்கினா செய்திருக்கிறார்.
இச்சத்திரசிகிச்சைகளில் ஒருவர்கூட இறக்கவில்லை என்பதில் மிகப் பெருமிதம் கொண்டுள்ளார் டாக்டர் இலியினிச்னா லெவுஷ்கினா. தனது வீட்டில் மாற்றுத் திறனாளியான தனது மருமகனையும் இலியினிச்னாவே பராமரித்து வருகிறார். 8 பூனைகளையும் வளர்க்கிறார்.
“ஓய்வு காலத்தில் நான் செய்வதற்கு வேறு எதுவுமில்லை. மருத்துவர் என்பது ஒரு தொழில் அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை” என்கிறார் டாக்டர் இலியினிச்னா லெவுஷ்கினா.
தனது ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கை தொடர்பில் இரகசியம் எதுவுமில்லை எனவும் இலியினிச்னா லெவுஷ்கினா கூறுகிறார். “நான் எல்லாவற்றையும் உண்கிறேன். அதிகம் சிரிக்கிறேன், அதிகம் அழுகிறேன்” என இவர் கூறுகிறார்.
“நான் இன்னும் ஏன் பணியாற்றுகிறேன் என்றால், இதில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். அத்துடன், வெற்றி பெறுவதை நான் விரும்புகிறேன். மக்கள் குணமடைவதற்கு உதவுவதை நான் விரும்புகிறேன்.
பல வருடங்களுக்கு முன்னர் வேறு எவரும் சத்திரசிகிச்சை செய்ய முன்வராத நிலையில் இருந்த பலருக்கு நான் சத்திரசிகிச்சை செய்து இவர்களை காப்பாற்றியுள்ளேன்.
அவர்கள் இன்னும் உயிருடன் உள்ளதுடன் வளர்ந்த பிள்ளைகளையும் கொண்டுள்ளனர்” என்கிறார் டாக்டர் டாக்டர் இலியினிச்னா லெவுஷ்கினா.








